Thiruvalluvar History in Tamil : 2000 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர் அருளிய திருக்குறள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ள நிலையில் அவருடைய உருவங்களை பற்றி எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை.
மனிதர்களின் வாழ்வியல் தத்துவங்களை முத்து முத்தாக இரண்டே வரிகளில் 1330 குறள்களினால் மிகவும் எளிமையாக எழுதி அருளிய, இந்த உலகம் போற்றக்கூடிய மகானின் உருவம் பற்றிய தேடல்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் இவர்களெல்லாம் தேடிக்கொண்டுதான் இருந்தனர்.
இந்தியாவிற்கு வியாபாரம் செய்யவந்த வெள்ளையர்கள் இங்கு காணப்படும் பல்வேறு மொழிகளையும், கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஏன் இந்த ஆர்வம் என்றால் கிறிஸ்த்துவ மதத்தை இந்தியாவில் போதிப்பதற்காவே …அவ்வாறாக இந்திய மொழிகளை குறிப்பாக தென்னிந்திய மொழிகளை ஆங்கிலேய நிர்வாகிகளுக்கு கற்று கொடுக்கும் பொருட்டு சென்னையில் புனித ஜார்ச் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் (The Madras College) என்ற கல்லூரியை நிறுவினார்கள்.

இங்கு தமிழை கற்ற பல ஐரோப்பியர்கள் தமிழின் பெருமையை உலக அளவிற்கு கொண்டுசென்றார்கள் என்றால் மிகையாகாது.உதாரணத்திற்கு கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி (வீரமாமுனிவர் ), ஜி. யு. போப், கால்டுவேல் போன்றவர்களை குறிப்பிடலாம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் பிரான்சிஸ் வைட் எல்லிசு என்பவராவார். இவர்தான் தி மெட்ராஸ் கல்லூரியை நிறுவியவர்.
18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மதராஸ் மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு என்பவர் தென்னிந்திய மொழிகளை நன்றாக கற்று அவற்றிக்கிடையேயான தொடர்புகளையும் ஆராயவும் செய்தார். பின்பு திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ் மொழிதான் என்று முதன் முதலில் ஆராய்ந்து சொன்னதோடு தமிழ் மொழியின் மீது இருந்த பற்றினால் தனது பெயரை எல்லீசன் என்று மாற்றிக்கொண்டார்.
இதன் பொருள் எல் +ஈசன் =ஈசனாகிய கடவுள் என்ற பெயரை குறிப்பதாகும்.இவர் திருக்குறளை நன்றாக கற்று அவற்றிலுள்ள அறத்துப்பாலில் அமைத்துள்ள முதல் 13 அதிகாரங்களையும் முதல் முதலில் 1820ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன் அந்த நூலை இயற்றிய திருவள்ளுவரின் மீது மிகுந்த மரியாதையும் வைத்திருந்தார்.
அதோடு முதன் முதலில் திருவள்ளுவருக்கு எல்லீசன் அவர்கள் கற்பனையான ஓர் உருவத்தை காட்சி படுத்தி அதனை தங்க நாணயத்தில் அச்சிடவும் செய்தார்.ஆனால் அந்த நாணயம் அந்த காலகட்டத்தில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாணயம் எல்லீஸ் அவர்களால் மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்தபோது உருவாக்கப்பட்டதாகும். இந்த நாணயம் கிட்டத்தட்ட 200 வருடங்கள் பழமையான நாணயம் என்று தமிழ் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
திருவள்ளுவர் இந்த நாணயத்தில் ஒரு சமண முனிவரை போன்று காட்சியளிக்கிறார். தலையும், முகமும் மழிக்கப்பட்டு, தலை மேல் குடையுடன் அந்த நாணயத்தில் திருவள்ளுவர் காணப்படுகிறார்.
Thiruvalluvar History in Tamil
எல்லீஸ் அவர்கள் திருவள்ளுவரை உருவகப்படுத்த எந்த உருவத்தையும் மாதிரிக்கு எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இவரை உருவாக்கப்படுத்தியவர்கள், இவரை சமண முனிவர் என்று கருதி இருந்தனர் என்று தெளிவாக தெரிகிறது. திருக்குறளில் ‘ஆதி பகவன்’, அந்தணன்’ , ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி என்று வரும் சொல் தொடர்கள் திருவள்ளுவரை சமண சமயத்தவர் என்று வைத்துக்கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும். என்கிறார் இதுகுறித்து இதை பற்றி ஆராட்சி செய்தகல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.

இந்த நாணயத்தை கொல்கத்தாவில் புகழ் பெற்ற “இந்திய தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில்” காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர், 1904 ஆம் ஆண்டு இந்து தியாலாஜிக்கல் மேல்நிலைப்பள்ளியில் கோ. வடிவேலு செட்டியார் அவர்கள் தமிழ் பண்டிதராக இருந்தபோது ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்’ என்ற நூலை வெளியிட்டார். இரண்டு பக்கங்களாக வெளிவந்த இந்த புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் ‘திருவள்ளுவநாயனார்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.
அதில் திருவள்ளுவர் ஜடா முடியுடனும் மீசை தாடியுடனும் மார்பில் குறுக்காக யோக பட்டை என்று சொல்லப்படும் துண்டை அணிந்தபடி காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் இன்னொரு கையில் ஒரு ஓலை சுவடியும் இருந்தது. அவர் நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது. ஏன் இப்படி ஜடாமுடியுடன்உள்ள தோற்றம் கொடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கமும் இந்த நூலில் உள்ளது. ‘நாயனார் சொரூபஸ்துதி’ என்ற பாடலை மையமாக வைத்தே இந்த தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு பிறகு இந்த நூலானது ஆங்கில பதிப்பாக வெளிவந்தபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டு சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு சைவ சமய அடியாரைப்போன்று திருவள்ளுவர் காட்சியளிக்கிறார்.

நெற்றியிலும், கரங்களிலும் விபூதி பட்டையுடன் காட்சியளிக்கும் இவர், ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருப்பதை போலவும் அவரை சுற்றி அடியார்கள் தொழுவதுபோலவும் அந்த படம் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தை சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார்.
இதற்கு பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் வெளியிட்ட நூல்களில் இருந்த திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது.
மேற் குறிப்பிட்ட திருவள்ளுவரின் படங்களை தமிழ்நாட்டில் பல வீடுகளில் வைத்து வணங்கப்பட்டது. திருவள்ளுவர் படங்களை வேறுசிலரும் வெளியிட்டார்கள். அந்த படங்களில் யோகாப்பட்டைக்குப்பதிலாக மார்பின் குறுக்கே பூணூலும் இடம்பெற்றிருந்தது. 1950 ஆம் வருடங்களில் பாலு – சீனு என்ற சகோதர்கள் கலை என்னும் இதழை நடத்தினார்கள். அந்த இதழில் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் திருவள்ளுவர் எந்த மத சின்னமும் இல்லாமல் இருந்தார்.
1950 களின் பிற்பகுதியில் தான் இப்போது நாம் பார்க்கும் வெள்ளுடை அணிந்த திருவள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்க ஆரம்பித்தன. இந்த முயற்சியை கவிஞர் பாரதிதாசன் துவங்கினார். அவர் திராவிடர் கழகத்தை சேர்ந்த ராமசச்செல்வன் என்பவரோடு சேர்ந்து வந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவை சந்தித்தார். அந்த மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலுவுகளை ராமச்செல்வன் ஏற்றுக்கொண்டார் என்று திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள திருக்குறள் ஆராய்ச்சி பகுதி என்ற பிரிவு இந்த படம் வரையப்பட்டுள்ளதை குறித்து ‘திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்’ என்ற ஒரு சிறிய நூல் வெளியீட்டினை கொண்டுவந்தது. தற்போதுள்ள திருவள்ளுவரின் படத்தை அப்படி ஏன் வரைந்தார் என்பதற்கான விளக்கம் அந்த நூலில் இடம் பெற்றிருந்தது. அதனுடைய விளக்கம் சுருக்கமாக கீழே உள்ளது.
கருத்துலகில் திருவள்ளுவர் சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதற்காக அவரை சுற்றி மரம், செடி, கொடிகள், வீடுகள் எதுவும் இல்லாமல் அவரை சுற்றி அறிவொளி மட்டும் இருக்குமாறு இந்த உருவம் உருவாக்கப்பட்டது. தன்னுடைய செயல், சிந்தனை,ஆடை ஆகியவைகளை அழுக்கு அடையாமல் இருக்க அவர் ஒரு சிறிய மரப்பலகை மீது உட்கார்ந்திருப்பது போன்று அமைக்கப்பட்டது.
தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு ஆகியவற்றை கொண்டுள்ளதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டதாக வேணுகோபால் சர்மா அந்த வெளியீட்டில் கூறுகிறார்.
பின்னால் வளர்க்க பட்ட குடுமி வெட்டப்பட்ட முடி பல இன குழுக்களுக்கு அடையாளமாகிவிட்டதால், திருமுடியும், நீவப்படாத தாடியும் இருப்பது போன்று வரையப்பட்டது.

“இந்தப் படத்தை வரைந்து முடித்தபிறகு நாகேஸ்வரபுரத்தில் ஒரு வீட்டில் இந்த படத்தை வைத்தார் வேணுகோபால் சர்மா. இந்த படத்தை காமராஜர், சி. என். அண்ணாதுரை, நெடுச்செழியன், மு.கருணாநிதி, எழுத்தாளர்கள், கல்வி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த திருவள்ளுவர் படத்தை பார்த்து பாராட்டி சென்றனர்.
பிறகு 1960 ஆம் வருடம் சி.என்.அண்ணாதுரை அவர்களால் காங்கிரஸ் மைதானத்தில் இந்த படம் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது.
சட்டமன்றத்திற்குள் தி.மு.க வந்தபிறகு, சட்டமன்றத்தில் திருவள்ளுவர் உருவ படத்தை வைக்க வேண்டுமென்று மு. கருணாநிதி கோரிக்கை வைத்தார் . “அதற்குப் பதிலளித்த முதல்வர் பக்தவத்சலம், மு. கருணாநிதி ஒரு உருவப்படத்தை வாங்கி கொடுத்தால் அதை வைப்பதில் எந்தவொரு ஆட்சேபனையில்லை ”என்றார் கருணாநிதியும் வேணுகோபால் வரைந்த திருவள்ளுவர் படத்தை பக்தவத்சலத்திடம் பரிந்துரை செய்கிறார்.
இதற்கு பின் 1964 ஆம் வருடம் மார்ச் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வேணுகோபால் வரைந்த அந்த திருவள்ளுவரின் படத்தை அன்றைய குடியரசு தலைவர் சாகிர் உசேன் திறந்து வைத்தார் என்கிறார் திருநாவுக்கரசு.
இதற்கு பின் முதல் அமைச்சராக மு. கருணாநிதி இருந்த காலகட்டத்தில் இந்த திருவள்ளுவர் படமானது அரசு பேருந்துகள் அனைத்திலும் இடம் பெற செய்யப்பட்டது. இந்த படமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அறிவிக்கப்பட்டு அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.
சென்னை மைலாப்பூரில் அமர்ந்த நிலையில் உள்ள திருவள்ளுவரின் சிலையானது இந்த படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |